Did you know ? Amazon is monitoring your home
அமேசான் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் `ரிங்' என்னும் வீடியோ காலிங் பெல் தயாரிக்கும் நிறுவனத்தை 6,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்தச் செய்தியை, நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம் எனத் தெரியாது. ஆனால், உலகமே உற்று கவனிக்கவேண்டிய, விவாதிக்கவேண்டிய மிக முக்கியமான செய்தி இது.
காலிங்பெல் எல்லாம் வழக்கொழிந்து, நாம் மொபைலில் மிஸ்டுகால் கொடுத்து கதவு திறக்கச் சொல்ல ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்தில், `காலிங் பெல்லில் முதலீடா?' எனத் தோன்றுகிறது இல்லையா! அதுவும் `இதில் 6,500 கோடி ரூபாய் பணம் போடுவதென்றால், அவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும்' என்றுகூட நினைக்கத்தோன்றும். ஆனால், உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் அமேசான் ஒன்றும் முட்டாள் அல்ல.
உண்மையில், இந்த ரிங் பெல் என்பது பக்கா க்ளாரிட்டியுள்ள, ஹெச்டி கேமராவுடன் 180 டிகிரி பார்க்கக்கூடிய ஒரு ஹைடெக் டோர் பெல். எப்போதும் இன்டெர்நெட்டில் இணைந்திருக்கும் இது, நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது மட்டுமல்ல, வெளியில் எங்கேயாவது இருக்கும்போதும் யாராவது உங்கள் வீட்டுக்கு வந்தால், உங்கள் மொபைலுக்கோ, கம்ப்யூட்டருக்கோ தகவல் அனுப்பும். நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே யார் வந்திருப்பது எனப் பார்த்து அவருடன் பேசவோ அல்லது தேவையான தகவல்களைக் கொடுத்து இதன் உதவியுடன் அவர்களைத் திருப்பி அனுப்பவோ முடியும். அவர்கள் வந்து போன வீடியோவை பிறகு தேவைப்படும்போது உங்கள் சேமிப்பிலிருந்து பிளே ஃபார்வேர்டு, பேக்வெர்டு செய்து பார்க்கவும் முடியும்.
மேலும், இதனுடன் இணைந்த `அமேசான் கீ ஹோம் கிட்'டை பேக்கேஜாக வாங்கிக்கொண்டால், நீங்கள் உங்கள் கதவை பூட்டு சாவி இல்லாமல் ரிங் பெல்லைக் கொண்டு டிஜிட்டலாய் லாக் செய்துகொள்ள முடியும். இதனால், மனைவி வீட்டின் உள்ளே படுத்திருக்கும்போது தாமதமாய் வரும் கணவருக்கு எழுந்து போகத் தேவையில்லாமல் படுக்கையில் இருந்தபடியே கதவைத் திறக்கலாம் அல்லது முன்பே செட் செய்துகொண்ட ஒரு பாஸ் நம்பர் மூலம் கணவரே மனைவியை எழுப்பாமல் கதவைத் திறந்துகொள்ள முடியும். வீட்டுவேலை செய்பவர்கள் வருகையில் அலுவலகத்தில் இருந்தபடியே கதவைத் திறந்துவிடுவதுடன், அவர்கள் வீட்டினுள் என்ன செய்கிறார்கள் என்றும் இந்த பேக்கேஜில் இணைந்திருக்கும் வீட்டுக்குள்ளான கேமரா மூலம் உங்களால் கண்காணிக்கவும் முடியும்.
பார்க்க இது உபயோகமாய்த்தானே தெரிகிறது என்கிறீர்களா?
Comments
Post a Comment
Your comments are welcome!